ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரையில் சொத்துத் தகராறு காரணமாக, ஐ.டி.ஐ., படித்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு ஆயுள் சிறை தண்டனை, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

மதுரை புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விவசாயி ராசுத்தேவர். புதுப்பட்டி கொட்டகைமேட்டை சேர்ந்தவர் விவசாயி மாயாண்டி (63). ராசுத்தேவருக்கு சொந்தமான ஏழரை சென்ட் நிலம், கொட்டகைமேட்டில் உள்ளது. இந்த நிலம் தனக்கு சொந்தமானது என, மாயாண்டி பிரச்னை செய்தார். இவ்வழக்கு மதுரை முன்சீப் கோர்ட்டில் நடந்தது. ராசுத்தேவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மாவட்ட கோர்ட்டில் மாயாண்டி அப்பீல் செய்தார்.

இதிலும் ராசுத்தேவருக்கு ஆதரவாக தீர்ப்பானது. இதையடுத்து, நிலத்தை சுத்தம் செய்து விட்டு 2006 செப்., 14ல், பகல் 12 மணியளவில் ராசுத்தேவர், அவரது மகன் பன்னீர்செல்வம் (22) (ஐ.டி.ஐ., படித்தவர்) மற்றும் உறவினர்கள் இரண்டு ஆட்டோ, பைக்கில் வீடு திரும்பினர். புதுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, ஆட்டோவை வழிமறித்த மாயாண்டி, அவரது மகன்கள் சந்தானம் (36), ராஜா (28), மூர்த்தி (27), கண்ணன் (23), சந்தானம் மனைவி சித்ரா (33), ராஜா மனைவி முத்துமாரி (23), மாயாண்டி மனைவி அம்மாசி (58) ஆகியோர், பன்னீர்செல்வத்தை அரிவாளால் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் பஸ் ஸ்டாப் அருகில் இருந்த பாண்டி என்பரின் டீ கடைக்குள் தஞ்சம் புகுந்தார். உள்ளே புகுந்து பன்னீர்செல்வத்தை வெட்டிக் கொன்றனர். ராசுத்தேவர் புகார்படி மாயாண்டி, அவரது மனைவி, மகன்கள், மருமகள்களை ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கைது செய்தார்.இவ்வழக்கு, மதுரை இரண்டாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் பி. அன்புசெல்வன் ஆஜரானார். மாயாண்டி, சந்தானம், ராஜா, மூர்த்தி, கண்ணன், சித்ரா, முத்துமாரி, அம்மாசி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை, 44 ஆயிரம் ரூபாய் அபராதம், அபராதத் தொகையில் 20 ஆயிரம் ரூபாயை ராசுத்தேவருக்கு வழங்கும்படி நீதிபதி ஆர். ராதா உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment