ஜாக்சனின் மாஜி ஆலோசகரிடமிருந்து 27.50 கோடி ரூபாய் பணம் மீட்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பாதுகாப்பாகக் கொடுத்து வைத்திருந்த 27.50 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், சென்ற மாத இறுதியில் மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, 2002ம் ஆண்டு அவர் எழுதிய உயில் ஒன்று கிடைத்தது. இந்த உயில் செல்லுபடியாகுமா என்பதை கோர்ட் விரைவில் தீர்மானிக்க உள்ளது.இந்நிலையில், அந்த உயிலை செயல்படுத்துவதற்காக, ஜாக்சனால் நியமிக்கப்பட்ட ஜான் பிரான்கா மற்றும் ஜான் மெக்லெய்ன் என்ற இருவரை, ஜாக்சன் எஸ்டேட்டின் சிறப்பு நிர்வாகிகளாக, லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண கோர்ட் நீதிபதி மிட்செல் பெக்லாப் நியமித்துள்ளார்.இதற்கிடையில், மைக்கேல் ஜாக்சன் ஏராளமான கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவரின் முன்னாள் நிதி ஆலோசகர் ஒருவரிடமிருந்து 27.50 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக எஸ்டேட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரான்கா மற்றும் மெக்லெய்ன் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:நாங்கள் மைக்கேல் ஜாக்சனின் நிதி ஆலோசகர் ஒருவரிடமிருந்து, 27.50 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளோம். மைக்கேல் ஜாக்சனுக்கு சொந்தமான எஸ்டேட்டின் மதிப்பு 2,500 கோடி ரூபாய். ஆனால், அவருக்கு இருக்கும் கடன் 2,000 கோடி ரூபாய் தான். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஜாக்சனின் எஸ்டேட் போன்றவை, கடனை அடைக்கத் தேவையானதை விட அதிகமாகவே உள்ளன. மைக்கேல் ஜாக்சனின் தாய் மற்றும் அவரது குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை குறிப்பிட்ட தொகையை வழங்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.ஆனால், அந்த மனுவில், மைக்கேல் ஜாக்சனின் பணத்தை வைத்திருந்த நிதி ஆலோசகர் யார், அவரிடமிருந்து எவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை.

No comments:

Post a Comment