நாகேஷ், விஜயா, பக்கோடா காதர் காமெடி:

ஏ.சுபைதா, விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: திரைப்படம் ஒன்றில் கிளைமாக்ஸ் சீனில் ஒருதலைக் காதலராக இருந்த நடிகர் நாகேஷிடம், தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லி அழும் நடிகை கே.ஆர்.விஜயாவை, சமாதானப்படுத்தும் நடிகர் நாகேஷ், கைதட்டி தன் உதவியாளரை அழைப்பார். உதவியாளராக நடித்த பக்கோடா காதர், ஒரு கிளாசில் ஜூஸ் எடுத்து வந்து நீட்டுவார். அதைப் பார்த்த நாகேஷ், "ஜூஸ் கொடுப்பவன் எப்படி இருக்கிறான்; குடிக்கிற நான் எப்படி இருக்கிறேன் பார்' என்று, தன் ஒல்லியான உடம்பை, ஒடிந்து போகிற அளவுக்கு வளைத்துக் காட்டி, கதாநாயகி கே.ஆர்.விஜயாவை கலகலவென சிரிக்க வைப்பார். மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக சட்டசபைக்குச் சென்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கம், சம்பள உயர்வையும், தொகுதிநிதி உயர்வையும், இரண்டரை கிரவுண்டு வீட்டு மனையை ஒதுக்க, கோரிக்கை வைத்து இருப்பதைப் பார்த்த பொதுமக்கள், தங்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் நிலை, திரைப்படத்தில் வந்த பக்கோடா காதரைப் போன்று கொழு கொழுவென்று இருப்பதைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு ஒன்றும் செய்ய இயலாது. அதிலும், காங்கிரஸ் ஞானசேகரன் எம்.எல்.ஏ., வீட்டு மனை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, கடந்த மூன்றரை ஆண்டாக அவ்வப்போது, தலைபோகிற பிரச்னையைப் போல சட்டசபையில் எழுப்பி, அதில் வெற்றியும் கண்டுள்ளார். தாராள தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கும், கோரிக்கைகளை ஏற்று, வாரி வாரி வழங்கும் கடைஏழு வள்ளலைப் போன்றாகி விட்டார். ஆனால், பொதுமக்களின் பாடுதான் திண்டாட்டம். இன்னமும் கிராமங்களில் வாழும் அடித்தட்டு மக்கள் படும் வாழ்க்கைப்பாடு சொல்லி மாளாது. பாதிக்கும் அதிகமானவர்களுக்கு, இரண்டு வேளை தான் உணவு; அதுவும் வயிறாரக் கிடைப்பதில்லை. சம்பள உயர்வு கேட்டு சென்னைப் பட்டினத்தில் ஊர்வலம் போகும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மடிப்புக் கலையாத உடையோடும், தாங்க முடியாத நகைகளை அணிந்து, கோஷம் எழுப்பி, ஒய்யார ஊர்கோலம் போவதை தொலைக்காட்சியில் பார்க்கையில், பாமர பொதுமக்களின் வயிறு பற்றி எரிகிறது. காலை ஆறு மணிக்கெல்லாம் விவசாயக் கூலிகளாய் செல்லும் பெண்களுக்கு, கிழியாத உள்பாவாடை கட்டக்கூட வழியில்லை. கடுமையான விலை ஏற்றத்தால், நல்ல சோறு என்பது, அமாவாசை விரதத்தின் போதுதான். காமராஜர் வளர்த்த காங்கிரஸ் பேரியக்கத்தில் இருக்கும் ஞானசேகரன் போன்றவர்கள், இதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். வறுமையில் வாடி வதங்கும் ஏழைகளின் வாழ்க்கை நிலை உயர, சட்டசபையில் குரல் எழுப்பட்டும். எதிர்கால ஏழைச் சமுதாயம், என்றும் நன்றியோடு இவர்களைக் கையெடுத்துக் கும்பிடும்.

No comments:

Post a Comment