கொடைக்கானல்,பழநி வனப்பகுதியில் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிவீடுகள்


கொடைக்கானல்,பழநி வனப்பகுதியில் ஆக்கிரமிப்பாக உள்ள தனி வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் நக்சலைட்களை தேடும் வேட்டையில் டி.ஐ.ஜி.,சந்தீப் மித்தல் தலைமையிலான போலீசார், வனத்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள பீதியை தவிர்க்கவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுகிறது.இது தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
சோதனை நடத்தும் பகுதியில் ஆக்கிரமிப்பாக ஆங்காங்கே குடிசைகள் உள்ளது. ஆடு மேய்ப்பவர்கள் தங்குவதற்காகவும், பல கி.மீ., நடந்து செல்லும் போது ஓய்வெடுக்கவும் இத்தகைய குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருந்தபோதும் அடையாளம் தெரியாத நபர்கள் இங்கு தங்கி வேட்டையாடுவது தெரிய வந்துள்ளது. இதற்கு உதாரணம் தான் பொருந்தலாறு அருகே உள்ள தனிக்குடிசை பகுதியில் நடந்த துப்பாக்கி வெடிவிபத்து.

ஆள் நடமாட்டம் இல்லாத வனத்துறைபகுதி துவங்கும் இடத்தில் பல ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த போஸ் குடிசை அமைத்துள்ளார். மின்வசதி, குடிநீர் வசதியில்லாமல் இங்கு தங்கியிருந்தவர் வனத்துறை, போலீசார் கண்களில் படாதது ஆச்சரியமே. கள்ளத்துப்பாக்கியை சர்வ சாதாரணமாக பயன்படுத்தியதை இப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆள் நடமாட்டம் இல்லாத வனம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தனியாக ஆக்கிரமிப்பாக உள்ள குடிசைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

No comments:

Post a Comment