கடந்த 15ம் தேதி வெளியான "தினமலர்' நாளிதழில், நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் அதிவேகத்தில் காரை ஓட்டியதாக செய்தி வெளியாகி உள்ளது. வத்தலகுண்டு அருகில் உள்ள முத்தாளபுரத்தைச் சேர்ந்த மாணவன் நவீன்குமார். ஜெயசீலன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.பள்ளி வளாகத்தில் இண்டிகா, ஸ்கார்பியோ, டவேரா மாடல் கார்களை, மாணவர்கள் மற்றும் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் மத்தியில் ஓட்டிக் காண்பித்துள்ளான்.
100ல் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை வத்தலகுண்டு ரோட்டில் காரை அதிவேகமான ஓட்டிச் சென்றுள்ளான். "கார் பந்தயம் பார்த்து, அதிவேகத்தில் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பந்தயத்தில் கலந்துகொள்வேன்' என நவீன்குமார் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.ஒருவருக்கு 18 வயது நிரம்பிய பிறகு தான், ஓட்டுனர் உரிமத்தை அரசு வழங்குகிறது.
எனவே, காரை நவீன்குமார் ஓட்டியது சட்டத்திற்கு எதிரானது. முறையான உரிமம் பெறாமல், ஒரு சிறுவன் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளான். விபத்தின் விளைவுகள், போக்குவரத்து விதிகள் அவனுக்கு தெரியாது.ஓட்டுனர் உரிமம் கோரி ஒருவர் விண்ணப்பித்தால், முதலில் பழகுனர் உரிமம் தான் வழங்கப்படும். அதன்பின் தான், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயதுக்கு குறைவானவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற தகுதி இல்லை. அவர்கள் சாலைகளில் வாகனத்தை ஓட்டக் கூடாது.பள்ளி அதிகாரிகளின் செயல் சட்டவிதிகளை மீறியதாக உள்ளது.
மேலும், 18 வயதுக்கு குறைவான மாணவர்களை காரை ஓட்ட தூண்டுவதாக உள்ளது. போக்குவரத்து விதிகள் தெரியாமல் காரை ஓட்டுவதால், மற்றவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படக்கூடும். இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் நிறுத்தப்பட வேண்டும்.எனவே, தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி தொடர்பாக கல்வித்துறை செயலர், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் விசாரணை நடத்தி, சட்டத்தை மீறியிருந்தால் ஜெயசீலன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரை கண்டிக்க வேண்டும்.
சாதனை என்கிற பெயரில் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி கல்வித் துறை மற்றும் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.
No comments:
Post a Comment