பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை எட்டு கோடியே 30 லட்சம்; இதில், 15 சதவீதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏழைக்குழந்தைகள் 25 லட்சம் பேர், பள்ளி பக்கமே தலைவைத்துக்கூட படுக்காமல் இருந்தனர். அவர்களுக்கு இலவச கல்வி தான் என்றாலும், படிக்க வைக்க தேவையான மற்ற செலவுகளை ஈடுகட்ட ஏழை பெற்றோர்களிடம் பணம் இல்லை. கூலி வேலைக்கு அனுப்பவே விரும்பினர். மூன்றாண்டுக்கு முன், பீகார் ஆட்சியில் அமர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த முதல்வர் நிதிஷ்குமார், ஏழை குழந்தைகள் படிக்க திட்டம் வகுத்தார். கிராம பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலையை போக்கினார். அதையடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகளை ஊக்குவிக்க ஏற்பாடு செய்தார்.
இப்படி 15 லட்சம் ஏழைக் குழந்தைகளை பள்ளிப்படிப்பில் ஈடுபடுத்தியதாக பீகார் அரசு சொல்கிறது. இப்போது 10 லட்சம் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றரை லட்சம் குழந்தைகளை படிக்க வைக்க புதுமையான சலுகை திட்டத்தை தீட்டினார். அது தான், ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் "பாக்கெட் மணி' அளிக்கும் திட்டம். விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும்."ஒரு ரூபாய் என்பது, ஒரு சிறிய தொகை தான், இதில் ஒன்று அல்லது இரண்டு மிட்டாய்கள் தான் வாங்க முடியும், எனினும் குழந்தைகளை இத்திட்டம் பள்ளிகளுக்கு கண்டிப்பாக ஈர்க்கும்' என்று தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஜித்தன் ராம் மான்ஜி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் தலித் மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடும்ப செலவை சமாளிக்க குழந்தைகளை கூலிவேலைக்கு அனுப்புகின்றனர். எலித்தொல்லையை ஒடுக்க சலுகை திட்டத்தை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், எலி பிடிக்கவும் குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். நிறைய தலித் குடும்பங்கள் தங்கள் பசியை எலியின் மூலமே போக்குகின்றனர். "எலி பிடித்த தலித் குழந்தைகளை, எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்து, "மவுஸ்'பிடிக்க வைப்போம்' என்று அமைச்சர் மான்ஜி சிரித்தபடியே கூறினார்.
நல்லது.
ReplyDelete