மொபைல் போனை தொடர்ந்து பயன்படுத்தினால் இரண்டு ஆண்டுகளில் காது செவிடாகும் அபாயம்


புதுடில்லி : மொபைல் போனில் தொடர்ந்து பேசுவதால் இரண்டு ஆண்டுகளில் செவிட்டு தன்மை ஏற்படுகிறது, என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இது குறித்து, அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: மொபைல்போனில் தொடர்ந்து ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பேசினால் இரண்டு ஆண்டுகளில் செவிட்டு தன்மை ஏற்படுகிறது. எனவே, ஒரு மணி நேரத்துக்கு மேல் மொபைல் போனில் தொடர்ந்து பேசாதீர்கள். அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்தும் சிலருக்கு காதில் மொபைல் போன் மணி ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. முதுகலை மருத்துவ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்பாட்டினால் வேறென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து ஆராயும் படி மருத்துவ கவுன்சிலிடம் கேட்டுள்ளோம். இதையடுத்து, அவர்கள் மொபைல் போன் பாதிப்பு குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த டாக்டர் வி.எம்.கட்டோச் குறிப்பிடுகையில், "மொபைல் போனிலிருந்து வெளிவரும் ரேடியோ அலைகளினால் மிருகங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்ததில் அவற்றின் மரபணு பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அவற்றின் விந்து உற்பத்தி திறனும் கடுமையாக பாதித்தது. "எனவே, இந்த பாதிப்பு மனிதனுக்கும் ஏற்படுமா? என்பது குறித்து இனி ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறோம். பெண்களுக்கு மாத விலக்கு சுழற்சி பாதிக்கப்படுமா? ஆண்களுக்கு ஆண்மை தன்மையில் கோளாறு ஏற்படுமா, மன அழுத்தம், தூக்கமின்மை ஏற்படுமா என்ற கோணத்திலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது' என்றார்.

No comments:

Post a Comment