ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மிக முக்கியமான வி.ஐ.பி., பட்டியலில் உள்ளவர்கள். அதனால், அவர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களின் உடலை தடவி சோதனை நடத்தக் கூடாது. இதுவே விதிமுறை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த ஏப்ரல் 24ம் தேதி, "கான்டினென்டல் ஏர்லைன்ஸ்' விமானத்தில் அமெரிக்காவின் நீவார்க் நகருக்கு பயணம் மேற் கொண் டார். அப்போது, விமானத்தில் ஏறுவதற்கு முன், அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் உடலைத் தடவி பரிசோதனை மேற் கொண்டனர். அத்துடன் அவரின் ஷூவையும் கழற்றி காண்பிக்கக் கூறினர். அப்துல் கலாம் இதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, கலாமின் மொபைல் போன், கையேடு மற்றும் கைப்பை போன்றவையும் ஒரு கூடையில் போடப் பட்டு எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டன. "முன் னாள் ஜனாதிபதியை பாதுகாப்பு பரிசோதனைக்கு ஆட்படுத்தக் கூடாது' என்ற விதிமுறையை மீறி, இந்த சோதனை நடத்தப் பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் ராஜ்யசபாவில் நேற்று எழுப்பப்பட்டது. கலாமிடம் சோதனை நடத்தியதற்கு எம்.பி.,க்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத் திய விவகாரம் மன்னிக்க முடியாத குற்றம். அந்தத் தவறை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரச்னை தொடர்பாக, நான் தனிப்பட்ட முறையில் கலாமை சந்தித்து வருத்தம் தெரிவிப்பேன். அவரிடம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விவரிப்பேன். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு, எந்த தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்படவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தான் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளனர். நாட்டின் உயரிய தலைவர்களில் ஒருவரான கலாமை, பரிசோதனை செய்தது தவறானது. தேசிய தலைவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டிக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டிக் குறிப்புகளை மீறி செயல்பட்டவர்கள் மீது, சிவில் விமானப் போக்குவரத்து சட்டம் விதி எண் 11ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், அன் னிய நாட்டு விமான நிறுவனமும் சம்பந்தப்பட்டுள்ளதால், வெளியுறவு அமைச்சர் கிருஷ் ணாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதை அவர் உறுதி செய்வார். இவ்வாறு அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.
ஆனால், ராஜ்யசபாவில் காங்கிரஸ் உட்பட எல்லா எம்.பி.,க் களும் இவ்விஷயத்தில் கொதித்துப் போய் பேசியதாவது:
ஜெயந்தி நடராஜன்-காங்: சோதனையை அனுமதித்த அதிகாரியை அந்த விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அதுவரை அந்த நிறுவன சர்வீசை இந்தியாவில் நிறுத்த வேண்டும்.
சிவா - தி.மு.க: இளைஞர்களின் நாயகன் கலாம். அவரை அவமதித்த விமானத்தை இங் கே இயக்க அனுமதிக்கக் கூடாது.
அருண் ஜெட்லி-பா.ஜ: வெளிநாட்டுத் தலைவர் இங்கே வந் தால், அவரை விமானம் வரை சென்று அழைத்து வர நடைமுறைகள் உள்ளன. ஆனால், நம் நாட்டைச் சேர்ந்தவர் என்றால் சோதனை நடக்கிறது; இது கொடுமையானது. கெட்ட நோக்கத்துடன் செயல்படுத்தப் பட்டது. என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை, இதை அனுமதிக்கக் கூடாது.
"யாருக்கும் விதிவிலக்கு கிடையாது': "வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி.,களுக்கு என, விசேஷ பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் இல்லை. மற்றவர்களை பரிசோதிப்பது போன்று தான் கலாமையும் நாங்கள் பரிசோதித்தோம்' என, கான்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த ஏர்லைன்ஸ் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கு விமானங்களை இயக்கும் மற்ற நிறுவனங்கள் பின்பற்றும் விதிமுறைகளைத் தான், கான்டினென்டல் நிறுவனமும் பின்பற்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமே எங்களின் இந்த சேவையில் திருப்தி அடைந்திருப்பார் என்று நம்புகிறோம். அவரை எங்களின் வாடிக்கையாளராக கொண்டிருப்பதில் பெருமைப்படுகிறோம். எங்கள் விமானத்தில் பறந்ததற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய பரிசோதனை இவர்களுக்கு இல்லை...: விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனை செய்வதிலிருந்து விலக்கு பெற்றுள்ளவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயர் உள்ளது. இதைமீறி, டில்லியில் அமெரிக்க விமான நிறுவன அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்தது, மத்திய சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணானது. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் தலாய்லாமா ஆகிய இருவருக்கும் விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே, அரசு பதவி ஏதுமில்லாத, அதே சமயம் பரிசோதனை விலக்கு பெற்றுள்ள நபர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. விமான நிலைய விதிமுறைகளின் படி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர், கேபினட் அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முதல்வர்கள், துணை முதல்வர்கள், தூதர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், கேபினட் செகரட்டரி, முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள், சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) பாதுகாப்பு அளிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனையிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment