5 தொகுதிகளில் தி.மு.க.,-தே.மு.தி.க., நேரடி மோதல் ம.தி.மு.க., - பா.ம.க.,வும் புறக்கணிக்க முடிவு

அ.தி.மு.க.,வைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடக்கும் ஐந்து இடைத்தேர்தலையும் ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இடதுசாரி கட்சிகளும் போட்டியிடாது என்பதால், இத்தேர்தல், தி.மு.க.,வுக்கும் தே.மு.தி.க.,வுக்கும் நேரடி மோதலாக அமைய உள்ளது.தமிழகத்தில் நடக்கவுள்ள ஐந்து சட்டசபை இடைத்தேர்தலில், போட்டியிடுவதில்லை என, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

தங்கள் கட்சி நிலைப்பாடு பற்றி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்து, வெற்றி பெற முயற்சிக்கின்றனர். "பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை' என, தேர்தல் கமிஷனே ஒப்புக்கொள்கிறது. பின், இந்தத் தேர்தல் எதற்கு? தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது என் யோசனை. அ.தி.மு.க., போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறினார். போட்டியிடுவதில்லை என அ.தி.மு.க., முடிவெடுத்துவிட்டதால், பா.ம.க.,வும் புறக்கணிப்பது உறுதியாகி உள்ளது.

இதேபோல, தொண்டாமுத்தூர், கம்பம் என இரு தொகுதிகளில் எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டிருந்த ம.தி.மு.க.,வும், இடைத்தேர்தலைப் புறக்கணிக்க உள்ளது.

அக்கட்சி பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தேர்தல்களில் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஊழலில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளிவீசி, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கிற வேலையை கணக்கச்சிதமாகத் திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்டு வெற்றியும் பெற்றார் கருணாநிதி. வாக்காளர்களின் ஓட்டு சீட்டுகளை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்குகிற இந்த அக்கிரமத்தை, இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியின் தலைமையும் இப்படி பட்டவர்த்தனமாகச் செயல்படுத்தியது கிடையாது.கங்கை வெள்ளமாகப் பாய்ந்த தி.மு.க.,வின் ஊழல் பணத்தையும், ஓட்டுச்சாவடி தில்லுமுல்லுகளையும் மீறித்தான், 12 லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தற்போது ஐந்து சட்டபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.திருமங்கலம் தொகுதியில் தி.மு.க., நடத்திய அராஜகம், ஜனநாயகப் படுகொலைதான் இந்த ஐந்து தொகுதிகளிலும் அரங்கேறக் காத்து இருக்கிறது. எனவே, இந்த இடைத்தேர்தல்களை ம.தி.மு.க., புறக்கணிக்கிறது.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

இதே முடிவைத்தான் இடதுசாரி கட்சிகளும் எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்த இடைத்தேர்தலில் களம் காண்பது என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இது குறித்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களுடன் மூன்று நாட்களாக ஆலோசனை நடத்தினார்.

அக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:இடைத்தேர்தலில் நாம் உறுதியாக போட்டியிட போகிறோம். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அச்சாரமாக நம்முடைய ஓட்டு வங்கி மற்றும் தொண்டர் பலத்தையும் காட்டுவதற்கு இதுதான் சந்தர்ப்பம். இந்தத் தேர்தல் மூலம் தே.மு.தி.க.,விற்கு மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.அதனால், மாவட்டச் செயலர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த வியூகங்கள் அடுத்த ஆலோசனை கூட்டத்தில் வகுக்கப்படும். அனைத்து மாவட்ட செயலர்களும் அக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.அத்தனை முக்கிய கட்சிகளும், இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ள நிலையில், அடுத்த மாதம் 18ம் தேதி, தி.மு.க.,வும் தே.மு.தி.க.,வும் நேரடியாக மோதிக்கொள்ளும் நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னம் மாற்றம்? "தே.மு.தி.க.,விற்கு முரசு சின்னம் ராசியில்லை; அந்தச் சின்னம், மக்கள் மனங்களில் அழுத்தமாக பதியவில்லை' என்ற கருத்து, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் நடிகர் சிரஞ்சிவியை போல சின்னத்தை மாற்ற வேண்டும் என்று விஜயகாந்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தே.மு.தி.க.,விற்கு "டிவி', தென்னை மரம், ரயில் இன்ஜின் ஆகிய சின்னங்களில் ஏதாவது ஒன்றை தேர்தெடுக்க வேண்டும் என மாநில நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment