தீ வைத்தால் பற்றி எரியும் ஆப்பிள்


கோபிசெட்டிபாளையம்: புற்றுநோயை எளிதாக வரவழைக்கும் மெழுகு தடவிய ஆப்பிள் கோபி பகுதி பழக்கடைகளில் கன ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் அலட்சியமாக உள்ள கோபி நகராட்சி நிர்வாகம், மக்கள் நலன் காப்பதிலும் கும்பகர்ணனாக தூங்குகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரை, காஃபி தூள், தேயிலை, மிளகு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் நூதன முறையில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. உணவில் கலப்படம் செய்தால் சம்பந்தபட்டவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கும் சட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

சீஸன் காலங்களில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழம், அன்னாசி, மாதுளை மற்றும் வாழைப்பழங்களை பழுக்க வைக்க, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பைட் கற்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவ்வப்போது சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் திடீர் ஆய்வின்போது இவை பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். இதுபோன்ற ஆய்வு அடிக்கடி நடப்பதில்லை. அதிகாரிகளின் மெத்தனத்தால் உணவு பொருட்களில் கலப்படம் மற்றும் பழங்களை வேதியியல் பொருட்களை கொண்டு பழுக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்கிறது. சமீப காலமாக ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்கவும், பளபளப்பாக இருக்கவும் அவற்றின் மீது மெழுகு தடவி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

பல மாவட்டங்களில் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, மெழுகு தடவப்பட்ட ஆப்பிள் பழங்களை கைப்பற்றினர். கோபி நகராட்சி பகுதியிலும் சென்ற வாரம் மெழுகு தடவிய ஆப்பிள் பழங்களை சுகாதார அலுவலர் ஆறுமுகம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கைப்பற்றினர். ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கோபி - சத்தி சாலையில் உள்ள பெரிய நவீன பழக்கடைகள், பஸ் ஸ்டாண்டு மற்றும் மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் புற்றுநோயை வரவழைக்கும் மெழுகு தடவிய ஆப்பிள் பழங்கள் வெகு ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் பழத்தின் மேல் பகுதியை சுரண்டினால் வெள்ளை நிறத்தில் மெழுகு தடவப்பட்டுள்ளது நன்றாக தெரிகிறது. பழத்தை தீயிட்டு கொளுத்தினால் நன்றாக பற்றி எரிகிறது. இத்தகைய ஆப்பிள் பழங்களை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய், சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்று கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.கோபி நகராட்சி பகுதிகளில் சாலைப்பணி, புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளில் போதிய கவனம் செலுத்தாமல் ஆமை வேகத்தில் செயல்படும் நகராட்சி நிர்வாகம், மக்கள் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் உணவுப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கவும் தயங்கி வருகிறது. 

No comments:

Post a Comment