“ஒன் டூ த்ரி ஃபோர்னு சொல்ல தெரிஞ்சா யாரு வேணா மியூசிக் டைரக்டர் ஆயிடலாம். நான் வந்திட்டேன். இனி யாரும் கவலைப்பட வேணாம். தமிழ்சினிமாவை நான் தாங்கி பிடிச்சிருவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். சும்மாயிருந்த எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. நான் அவங்க கேட்டதை செஞ்சு கொடுத்திருக்கேன். அவ்வளவுதான். இதுவரைக்கும் வராத இசையை கொடுத்திருக்கேன்னு சொல்ல முடியாது. ஏற்கனவே வந்த பாட்டைதான் லேசா சேஞ்ச் பண்ணி கொடுத்திருக்கோம். பாடலை கேட்டால் எங்கேயிருந்து அடிச்சோம்னு தெரியாது. இந்த படத்தோட நூறாவது நாள் விழாவிலே வேணும்னா சொல்றேன், எதுலேர்ந்து எடுத்தோம் என்று!” கங்கை அமரன் இப்படி சொல்ல சொல்ல, அரங்கத்தில் செம க்ளாப்ஸ்!
பின்னாலேயே பேச வந்தார் பாக்யராஜ். இவர் சொன்ன பிளாஷ்பேக் இன்னும் சூப்பர். “உனக்கெல்லாம் மியூசிக்குன்னா என்னன்னு தெரியுமான்னு அமரை வெளியே விரட்டிவிட்டுட்டாங்க. எனக்கும் ஒன்ணும் தெரியாதுன்னு வெளியே அனுப்பிட்டாங்க. ரெண்டு பேரும் லாட்ஜில் தங்கி வெறியோட ட்யூன் போட்டோம். பின்னாளில் அதெல்லாம் பெரிய மியூசிக்கல் ஹிட் ஆச்சு. என்னோட முதல் படமான சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள் படத்துக்கெல்லாம் அமர்தான் மியூசிக். அதுக்கு பிறகு நானும் இளையராஜா, விஸ்வநாதன்னு போயிட்டேன்”.
“ஏவிம்எம் ல் முந்தானை முடிச்சு பண்ணும்போது எனக்கு இசையமைப்பாளரா அமரன்தான் இருக்கணும்னு சொல்லிட்டேன். பிறகுதான் அவங்களுக்கு கதையை சொன்னேன். இவ்வளவு நல்ல கதையா இருக்கே, இளைராஜாவை மியூசிக் போட சொல்லலாமேன்னாங்க. நான் அமரிடம் சொல்லிட்டேன். முடியாதுன்னு பிடிவாதமா இருந்தேன். அவங்க என்னை விட்டுட்டு நேரா அமர்கிட்டவே போய் ரிக்வெஸ்ட் பண்ணிட்டாங்க. பிறகு அவரே என்னை கூப்பிட்டு நான் விலகிக்கிறேன்னு சொல்லிட்டாரு”.
“அப்புறம் இளையராஜாகிட்டே போனா அவரு பிகு பண்ணுறாரு. நீ முதலில் எங்கிட்டே வரலியே என்று. அமரன் என்ன வேற ஆளா? நீங்க சொல்றது ரொம்ப அநியாயம்னு அவரை சமாதான படுத்த வேண்டியதாப் போச்சு” என்று பாக்யராஜ் உண்மைய போட்டு உடைக்க, கங்கை அமரன் உள்ளிட்ட அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
விழாவில் கலந்து கொண்ட இன்னொரு சகாப்தம், தமிழ்சினிமாவை வேறு பாதைக்கு திருப்பிய இயக்குனர் மகேந்திரன். “பழமையை உடைக்கிற இளைஞர்கள் இப்போது வருகிறார்கள். அவர்களை வாழ்த்துகிறேன்” என்றார். முன்னதாக திரையிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் மூன்றும் திகட்டவே திகட்டாத தித்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment