எது எனக்கழகு ?

எத்தனை முறை
கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்.
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?

சில நேரங்களில்
பனிக்குள் பொதிந்து வைத்த
நீராய்,
இன்னும் சில நேரம்
நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய்
காதல்.

அது,
கிழமைகளின் கீழ்
கிழிந்து போவதில்லை.

இதயக் கோபுரங்களை
வெள்ளை விமானங்கள்
விழுங்கிடுமா என்ன ?

நீ,
அம்மனைத் தரிசிக்கும்
ராகு கால ரகசியம் முடிந்தபின்
நான் உன்னை
தவமிருந்து தரிசிக்கிறேன்.

நீ தான்,
விரதமிருக்கிறேன்
விலகிப் போ என்று
அவ்வப்போது
உன் செவ்வாய் கதவுகளைச்
சாத்தியே வைக்கிறாய்.

கர்ப்பக்கிரகம் திறந்த பின்னும்
கடவுளை யாரோ
திரையிட்டு மறைப்பதாய்
தோன்றுகிறது எனக்கு.

நல்ல வேளை,
நீ
மௌன விரதம் இருப்பதில்லை.

பூக்களுக்குள் வாசனை ஊற்றி
வண்டின் நாசிகளை
வடமிட்டுக் கட்டி இறக்கினால்
வலிக்காதா என்ன ?
மனசுக்கு.

எந்த ஆடை எனக்கழகு?
என
ஓர் பிரபஞ்சக் கேள்வி கேட்கிறாய்.

எந்தச் செடி
எனக்கழகென்று
பூக்கள் கேட்பது நியாயமா ?

எந்தப் பூ
எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி வினவலாமா ?

தொட்டாச்சிணுங்கியின்
தோழி நீ,
அனிச்ச மலரின்
பெண் அவதாரம் நீ,
விடையில்லையேல் வாடிவிடுவாய்.

காதுகளால் கேட்பது
காதலில் சுவையில்லை
உன்
உதடுகளைக் கடன் கொடு
முத்தத்தின் உலை தரும்
வெப்பத்தால் விளக்குகிறேன்.

No comments:

Post a Comment