கோர்ட்

ஈரோடு: ""இந்திய நீதிமன்றங்களில் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன,'' என பவானியில் நடந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேசினார். பவானியில் நான்கு கோடியே 72 ஆயிரத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றமும், 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீதிபதிகள் குடியிருப்பும் கட்டப்படுகிறது.


இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கட்டட அடிக்கல்லை திறந்து வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேசியதாவது: ஹரித்துவார் சென்றபோது கங்கையில் நீராடக்கூறினர். அங்கு கங்கையாற்றின் அகலம் அரை கிலோ மீட்டருக்கு மேல் இருந்தது. அலகாபாத்தில் யமுனையும், கங்கையும் சங்கமிக்கும் இடத்துக்கு சென்றேன். அந்த இடம் 70 அடி ஆழம் என தெரிவித்தனர். காவிரியாற்றை கால்நடையாக கடந்துச் செல்லும் அளவுக்கு தான் தற்போது தண்ணீர் ஓடுகிறது. எனவே, முதற்கட்டமாக தேசியளவில் நதிகளை இணைத்து, வடக்கே வீணாக ஓடும் தண்ணீரை தென்னகம் பக்கம் திருப்பி விட வேண்டும்.


சுப்ரீம் கோர்ட் புள்ளி விவரப்படி, 2008ல் சுப்ரீம் கோர்ட்டில் 70 ஆயிரத்து 352 வழக்குகள் தேங்கியிருந்தன. வழக்குகள் தேக்கம் அடையக் கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் 26 நீதிபதிகளுடன், கூடுதலாக ஐந்து நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது. கடந்த 2008 டிச., 31ம் தேதி தமிழகத்தில் 10 லட்சத்து 16 ஆயிரத்து 598 வழக்குகள், புதுவையில் 25 ஆயிரத்து 46 வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது நான்காயிரம் கிராம நீதிமன்றங்களை உருவாக்க மத்திய அரசு பார்லிமென்டில் மசோதா கொண்டு வர உள்ளது. இந்தியாவில் 14 ஆயிரம் நீதிமன்றங்கள் உள்ளன. நான்கு கோடி வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.


 12 ஆயிரத்து 500 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். ஒரு நீதிபதி, ஓராண்டில் நான்காயிரம் வழக்குகளை கையாள்கிறார். எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற நிலை இல்லை. 10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் நியமிக்க வேண்டும் என அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. டில்லி, சென்னை பகுதியில் லட்சக்கணக்கான செக் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். தற்போது 21 மாநில ஐகோர்ட்கள் இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஐகோர்ட்டில் தினசரி எந்ததெந்த வழக்குகள் நடக்கிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு சதாசிவம் பேசினார். ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹேமந்த் லட்சுமண் கோகுலே, ஐகோர்ட் நீதிபதி ரவிராஜபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment