தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். வி.சேகர் பேசினார். இதற்கு அ.இ.அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட விவாதத்துக்கு பிறகு எஸ்.வி.சேகர் பேசுகையில், ஒரு அரசியல் நாகரீகத்துக்காகத்தான் துணை முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நான் அ.இ.அ.தி.மு.க.வில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தான் இந்த சபைக்கு வந்தேன். இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.
மாற்றுக் கட்சியினர் பேசக்கூடாது என்றால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்கும். துணை முதலமைச்சரை பாராட்டுவதால் 'துரோகி' என்று சொல்வது சரியல்ல. ஆனால் என் அருகில் இருக்கும் உறுப்பினர்கள் என்னை துரோகி என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மை இல்லை.
உறுப்பினர் கலைராஜன், அடுத்து நீ பேசினால் போட்டு விடுவேன் என்று கூறுகிறார். சட்டத்தை மதிக்க வேண்டிய சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது உயிருக்கோ,உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன். நான் வாழ்த்து மட்டும் சொல்ல விரும்பினேன். துணை முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது குறுக்கிட்டு பேசிய அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் கலைராஜன், இங்கு பேசிய எட்டப்பன் எஸ்.வி.சேகர் நாளை பன்றிக்காய்ச்சலால் “படார்” என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு நான் பேச வில்லை என்றார்.
அப்போது அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் சிவபுண்ணியம், பா.ம.க. உறுப்பினர்கள் ஜி.கே.மணி, வேல்முருகன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி ஆகியோர் எஸ்.வி.சேகர், கலைராஜன் ஆகியோருடைய பேச்சையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விடலாம் என கருத்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எஸ்.வி.சேகர் குற்றச்சாற்று கூறினார், அதற்கு கலைராஜன் பதில் சொல்லி விட்டார். எனவே அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.
இதையடுத்து அமைச்சர் பரிதி இளம் வழுதி கூறுகையில், எஸ்.வி.சேகர் அ.தி.மு.க.வினரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதையும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கருத்தையும் இந்த அவையில் பதிவு செய்து இருக்கிறார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவைத் தலைவரின் கடமை என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் ஆவுடையப்பன், உறுப்பினர் கலைராஜன் இருக்கையை விட்டு எழுந்து இங்கு வந்தது தவறு. இருவர் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
No comments:
Post a Comment