ஹாலிவுட்டில் ர‌ஜினி ரோபோ

கேட்கிற செய்தியெல்லாம் கிர்ரடிப்பது போலவே இருக்கிறது. ஏழு நாள் தாடியும் எளிமையான உடையுமாக இமயமலைக்கு போகும் கெட்டப்பில் ர‌ஜினி பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் எந்திரன் பட வேலைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் எப்படி? இந்திய சினிமாவில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஹைடெக் பிரமாண்டத்தில்.

விஞ்ஞானி ர‌ஜினி அவரைப் போலவே ரோபோ ஒன்றை உருவாக்குவதும், ஒரு கட்டத்தில் உருவாக்கிய ர‌ஜினிக்கே அந்த ரோபோ கட்டுப்படாமல் காட்டுத் தர்பார் நடத்துவதும், ர‌ஜினி அதனை கட்டுக்குள் கொண்டு வருவதும்தான் எந்திரன் படத்தின் கதை.

படத்தின் முதுகெலும்பே ர‌ஜினி அவரைப் போலவே உருவாக்கும் இந்த ரோபோதான். அதனை ஹாலிவுட் நிறுவனமான ஸ்டேன் வின்ஸ்டன் அச்சு அசலாக ர‌ஜினி போலவே உருவாக்கியிருக்கிறது. டெர்மினேட்டர் வ‌ரிசைப் படங்களில் வரும் ரோபோக்களை வடிவமைத்ததும, உருவாக்கியதும் இந்த நிறுவனம்தான். இவர்கள் பணிபு‌ரிந்த முதல் இந்தியப் படம் என்ற பெருமை எந்திரனுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த ரோபோ உருவாக்கத்துக்காக ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார் ர‌ஜினி. அங்கு அவரது உடலளவுகள் துல்லியமாக எடுக்கப்பட்டு அவரைப் போலவே ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக ஒன்றரை வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டுடியோ நிபுணர்கள்.

அடுத்த வருட இறுதியில் எந்திரன் திரைக்கு வந்துவிடும் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment