இதோடு நிற்காமல், அந்த இரண்டு மாதக் கைக்குழந்தைக்கு முன் பிணைய விடுதலைப் பிறப்பித்து நீதிபதியும் உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தையே கேலிக் கூத்தாக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் மும்பையில் நடந்தேறியுள்ளது. அதன் விவரம் என்னவென்று பார்க்கலாம்.
மும்பையைச் சேர்ந்த சும்சுதீன் கான், தனது மனைவி ஷகிலாவை 2 ஆண்டுக்கு முன்பு விவகாரத்து செய்துவிட்டார். பின்னர் ரேஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்து 2 மாதம் ஆகும் குழந்தைக்கு ஜோயா என்று பெயர் சூட்டினர்.
இந்த நிலையில், சம்சுதீன் குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் மனைவி ஷகிலா தற்போது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார். அந்த புகாரில் தன்னைக் கொடுமைப்படுத்தியவர்கள் பட்டியலில் சும்சுதீன், ரேஷ்மா மற்றும் 2 மாதக் கைக்குழந்தை ஜோயாவின் பெயரையும் ஷகிலா குறிப்பிட்டிருந்தார்.
உடனே காவல்துறையினர் விரைந்து சென்று, சும்சுதீன், ரேஷ்மா, ஜோயாவை காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். மதியம் 1 மணிக்கு வந்தவர்களை இரவு 10 மணிக்குத்தான் திருப்பி அனுப்பியுள்ளனர். (கைக் குழந்தையுடன் ரேஷ்மா இவ்வளவு நேரம் எப்படி துன்பப்பட்டிருப்பார் என்பது எல்லா தாய்மார்களுக்கும் புரியும்.)
முதல் தகவல் அறிக்கையிலும், குழந்தை ஜோயா உட்பட 8 பேரின் பெயர்களை காவல்துறையினர் சேர்த்துள்ளனர். அப்போது, குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டாம் என்று கூறி ரேஷ்மா கதறியுள்ளார். ஆனால், குழந்தையின் பெயரை சேர்ப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்று காவல்துறையினர் காட்டமாகக் கூறியுள்ளனர்.
ஜோயா உட்பட 8 பேர் சார்பில் நீதிமன்றத்தில் முன் பிணைய விடுதலை மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சம்சுதீன் தவிர மற்ற 7 பேருக்கும் முன் பிணைய விடுதலை வழங்கினார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சட்ட நிபுணர்கள், 2 மாதக் கைக் குழந்தை மீது வழக்குத் தொடர்ந்த ஷகிலா மீதும், குழந்தை மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை மீதும், குழந்தைக்கு முன் பிணைய விடுதலை அளித்த நீதிபதிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
2 மாதக் குழந்தை மீது வழக்கா? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. புகார் கொடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சட்ட நிபுணர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
மும்பை முன்னாள் மேயரும் வக்கீலுமான நிர்மலா சவந்த் கூறுகையில், 7 வயது வரை ஒரு குழந்தையை அப்பாவியாகவே சட்டம் கருதுகிறது. எது சரி, எது தவறு என்று அந்த குழந்தைக்கு அதுவரை தெரியாது. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இளம்சிறார் சட்டப்படி விசாரிக்க வேண்டும்.
இந்த நிலையில் 2 மாத கைக்குழந்தை மீது வழக்கு போட்டது விந்தையாக உள்ளது. அதிலும், அந்தக் குழந்தைக்கு முன் பிணைய விடுதலை கேட்டிருக்கவே வேண்டாம். நீதிமன்ற வரலாற்றில் சிறு குழந்தைக்கு எந்த நீதிபதியும் முன் பிணைய விடுதலை கொடுத்தது இல்லை. குழந்தை ஜோயாவுக்கு முன் பிணைய விடுதலை அளித்தது சட்டத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்றார்.
இதில் நமக்கு சில சந்தேகங்கள் எழுகின்றன? அதாவது ஷகிலா 2 ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து பெற்றுவிட்டார். அதன்பிறகுதான் ரேஷ்மாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் சும்சுதீன். அப்படியிருக்க, 2 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷ்மா எப்படி ஷகிலாவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியிருக்க முடியும். மேலும், 2 ஆண்டுகளாக ஷகிலா என்ன செய்து கொண்டிருந்தார். விவாகரத்து கேட்பதற்கு முன்பே அவர் வரதட்சணை வழக்கை அல்லவா கொடுத்திருக்க வேண்டும். விவாகரத்து எல்லாம் பெற்று 2 ஆண்டுகள் கழித்து இன்றுதான் அவருக்கு வரதட்சணை கொடுமை செய்தது நினைவுக்கு வந்ததா? அப்படியும் அந்த பச்சைக் குழந்தை இவரை எந்த வகையில் கொடுமை செய்தது? செய்திருக்க முடியும்? இந்த கேள்விகள் எல்லாம் ஏன் அந்த காவல்துறைக்கு தோன்றவில்லை.
சில முன் விரோதங்கள் காரணமாக தங்களது வஞ்சகத்தைத் தீர்த்துக் கொள்ள சிலர் சட்டத்தை இப்படி தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு சட்டத்தின் மூலம் மக்களுக்கு பாதுகாப்புத் தர வேண்டிய காவல்துறையும், சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு அப்பாவிகளை துன்புறுத்துகின்றன. இதெல்லாம் ஜனநாயக நாட்டில் அரங்கேறும் சம்பவங்கள்..
No comments:
Post a Comment