தேவைப்பட்டால் போராட்டம் - விஜய் அதிரடி


என்னுடைய கல்யாண மண்டபத்தை இப்போ பார்த்தா மினி ஹாஸ்பிடல் போலவே இருக்கு. மகிழ்ச்சியும், பரவசமுமாக நடிகர் விஜய் இதை சொன்ன இடம் அவரது வடபழனி ஜேஎஸ் திருமண மண்டபம். இலவச மருத்துவ ஆலோசனை, இலவச சிகிச்சை, ரத்ததானம் என உண்மையிலேயே மினி ஹாஸ்பிடல் போலதான் இருந்தது திருமண மண்டபம்.

என்னுடைய ரசிகர்கள் தங்கள் தகுதிக்கு மீறி நல்ல விஷயங்கள் செய்றாங்க என்று பேச்சைத் தொடங்கினார் விஜய். அவரது பிறந்தநாள் குறித்து கேட்டதற்கு, ‘மற்ற பிறந்தநாட்களை விட இந்த பிறந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். இந்த பிறந்த நாளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை நிறைவேற்றியும் இருக்கிறேன்’ என்றார்.

அரசியல் கட்சி தொடங்கப் போகிறீர்களா?

நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் ரொம்ப நாட்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்யலாம் என்ற அவர்களின் கருத்தை நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அரசியலுக்கு வரலாமா என கருத்து கேட்டது உண்மைதான். மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தினேன்.

ரசிகர்களிடம் மட்டுமில்லாது பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டேன். அவர்கள் எனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். அதை என் மூளையில் ஏற்‌றிக் கொண்டு என்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அவர்கள் கருத்து‌ப்படி இப்போது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டேன். அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

உங்கள் ரசிகர்களை இனி தொண்டர்கள் என்று அழைக்கலாமா?

அவர்கள் எப்போதோ தொண்டர்களாகிவிட்டார்கள்.

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக உங்களுக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா?

இல்லை. யாரும் மிரட்டுற அளவுக்கு நான் சீன் காட்டவில்லையே. இப்படியே மிரட்டல் வந்தாலும் அதை எதிர்கொள்வேன்.

மக்கள் இயக்கம் ஆரம்பித்திருக்கிறீர்கள், பொதுப் பிரச்சனைக்காக போராடுவீர்களா?

என்னுடைய ரசிகர்கள் இனி உள்ளூர் பிரச்சனைக்காக போராடுவார்கள். தேவைப்பட்டால் அந்த போராட்டங்களில் நானும் கலந்து கொள்வேன்.

வேட்டைக்காரன் எப்போது வெளியாகிறது?

70 சதவீத படப்பிடிப்பு இதுவரை முடிந்திருக்கிறது. தீபாவளிக்கு படம் வெளிவரும். என்னுடைய ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்கிறார். இயக்குனர் யார், ஹீரோயின் யார் என்பதை வேட்டைக்காரன் முடிந்த பிறகு முறைப்படி அறிவிப்பேன்.

பத்தி‌ரிகையாளர்கள் மீண்டும் அரசியல் பற்றி கேட்கவே, மைக்கை ஆஃப் செய்த விஜய், அன்னதானம் செய்ய வேண்டியிருக்கு என்று அங்கிருந்து கிளம்பினார். முன்னதாக ரங்கராஜபுரம் மற்றும் அருணாச்சலம் ரோடு ஆகிய இரு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை அவர் தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment