சட்டப்பேரவையில் எரிசக்தி துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழ்நாட்டில் இன்று மின்சாரம் எப்போது வரும், போகும் என்று சொல்ல முடியவில்லை. மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தங்கு தடையின்றி வோல்டேஜ் குறையாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
இலவச வண்ணத் கலர் தொலைக்காட்சிக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மின்வெட்டு காரணமாக இந்த இலவசங்களால் எந்த பயனும் இல்லை. மின்சார தேவை முயல் வேகத்தில் ஏறுகிறது. ஆனால் உற்பத்தி திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
வரும் மார்ச் மாதம் வரை மின்சார தேவை 10 ஆயிரத்து 400 மெகாவாட். ஆனால் உற்பத்தி 6 ஆயிரத்து 300 மெகாவாட் அளவுதான் இருக்கும் என்கிறார்கள். இந்த பற்றாக்குறையை அரசு எப்படி சரி செய்ய போகிறது. 2012 ம் ஆண்டு வரை மின் பற்றாக்குறை தீராது என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு நெய்வேலி அனல்மின் உற்பத்தி நிலையங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஆண்டு ரூ. 6500 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி தேர்தல் முடிந்து விட்ட காரணத்தால் மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது.
தென்னக மாநிலங்களில் ஆண்டு தோறும் ஏற்படும் மின்சார பற்றாக்குறையை அடிப்படையாக வைத்து அந்த விகிதாசாரத்தில் மின்சாரத்தை மத்திய அரசு பிரித்து வழங்க வேண்டும். அப்போதுதான் மின் பற்றாக்குறையை மாநில அரசுகள் சமாளிக்க முடியும் என்று விஜயகாந்த் கூறினார்.
No comments:
Post a Comment