டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ் ராஜினாமா : ஆதரவு தெரிவித்து நடிகை விஜயசாந்தியும் விலகல்

ஐதராபாத் : தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவை சமாதானப்படுத்தி, அவரது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற வைக்கும் முயற்சியில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், ராவிற்கு ஆதரவு தெரிவித்து நடிகை விஜயசாந்தியும் தன் கட்சிப் பதவியை உதறினார்.



ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் சந்திரசேகர் என்பவரையும் மற்றும் நான்கு பேரையும் கட்சியில் இருந்து நீக்கினார் சந்திரசேகர ராவ்.இதனால், அதிருப்தியாளர்களுக்கும், கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவிற்கும் இடையே மோதல் உருவானது. பிரச்னை முற்றவே சந்திரசேகர ராவ் நேற்று முன்தினம் தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அவருக்கு ஆதரவாக மேடக் தொகுதி எம்.பி.,யான விஜயசாந்தியும், கட்சியின் பொதுச் செயலர் மற்றும் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் பொறுப்புகளை நேற்று ராஜினாமா செய்தார். தன் ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநில செயற்குழுவில் சமர்ப்பித்தார்.



அந்தக் கடிதத்தில்,"தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்று, கட்சியை தொடர்ந்து வழிநடத்தி செல்ல ஒப்புக் கொண்டால், எனது ராஜினாமாவை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினி நரசிம்ம ரெட்டி, சந்திரசேகர ராவை நேற்று சந்தித்து, ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோரினார். அதேபோல, வேறு பல தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். வாரங்கல் உட்பட சில பகுதிகளில், டி.ஆர்.எஸ்., கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



இந்நிலையில், இப்பிரச்னை குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிப்பதற்காக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவியில் அவர் தொடர்ந்து, தெலுங்கானா தனி மாநிலத்தைப் பெற்றுத்தர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.



இதற்கிடையில், மாஜி அமைச்சர் சந்திரசேகர் வீட்டில் முன்னாள் எம்.பி., ரவீந்திர நாயக், முன்னாள் எம்.எல்.சி., ரகுமான் உட்பட அதிருப்தி தலைவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர்.அதன் பின் நிருபர்களிடம் பேசிய அவர்கள், "சந்திரசேகர ராவின் ராஜினாமா ஒரு நாடகம். கட்சியின் தலைவராக தலித் ஒருவரை நியமிக்க வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment