எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதில் முக்கிய கண்டுபிடிப்பு

உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியில் முக்கிய திருப்பமாக, மனித உடலில் எய்ட்ஸ் கிருமி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை கனடா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் இதனை கண்டுபிடித்துள்ள கனடா விஞ்ஞானிகள், தற்போதைய கண்டுபிடிப்பு மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம் என்று கூறியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் பாதித்த ஒருவருக்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சை மூலம் அந்த நோய் மென்மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது.ஏனெனில் அந்த நோயை உண்டாக்கும் கிருமி மனித உடலில் எங்கோ மறைந்து இருந்து கொண்டு, மருநதின் வீரியம் குறைந்தவுடன் மீண்டும் மீண்டும் தாக்குகிறது.

இந்நிலையில், இதுவரை எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி மனித உடலில் கிட்னியிலோ ( சிறுநீரகம் ) அல்லது மூளையிலோதான் மறைந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதிக்கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின் மூலம் இந்நோய் கிருமி மிக பாதுகாப்பாக, மனித உடலில் நீண்ட நாட்கள் வாழும் ' மெமரி செல் ( உயிரணு )' களில் மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

'ஸ்டெம் செல்'களைப் போன்றே மனித உடலில் நீண்ட ஆயுளைக்கொண்ட இந்த 'மெமரி செல்', ஏதாவது புதிய வைரஸ் அல்லது நோய் தாக்காதவரை, பெரும்பாலான நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும்.

அதேபோன்று 'ஸ்டெர்ம் செல்'களைப் போன்றே, தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் திறனும் 'மெமரி செல்' - க்கு உண்டு.எனவே எய்ட்ஸ் கிருமி அதை தாக்கும்போது, அதனை எதிர்த்துப் போராடுவதற்காக பல மடங்கு செல்களை அது உருவாக்கும்.

ஆனால் பிரச்னை என்னவென்றால்,எய்ட்ஸ் கிருமி ஒருமுறை இந்த 'மெமரி செல்' - க்குள் புகுந்துவிட்டால், அதுவும் அதனுடன் சேர்ந்து பன்மடங்காக பெருகிவிடும்.

இவ்வாறாகாத்தான் எய்ட்ஸ் கிருமி மனித உடலில் பத்திரமான இடத்தில் ஒளிந்துகொண்டு,பின்னர் தனது வேலையை காட்டி வந்தது.

இந்நிலையில், மெமரி செல் - லில் ஒளிந்திருக்கும் எய்ட்ஸ் கிருமியை, மெமரி செல் - க்கு பாதிப்பில்லாமல் அழிப்பதற்கான வழிமுறைகளை கண்டறியும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக கனடா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு, எய்ட்ஸ் கிருமியை அழிப்பதற்கான முதல் தடயமாக அமைந்துள்ளதாக இந்த ஆராய்ச்சிக் குழு தலைவரான சீக்லே தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது 33 மில்லியன் பேர் எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றனர் என்பதும், ஆண்டுக்கு 2.7 மில்லியன் பேர் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment