சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் ஆவுடையப்பன், மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னேற்றான் கொல் எனும் சொல் என்ற திருக்குறளை வாசித்து அதற்கான விளக்கம் அளித்தார்.
மகன் தந்தைக்கு செய்யக்கூடிய உதவி இவருடைய தந்தை இவரைப்பெற என்ன தவம் செய்தாரோ என்ற விளக்கத்தை கூறினார். உடனே உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினர்.
பின்னர் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தின் துணை முதலமைச்சராக முதலமைச்சர் கருணாநிதி என்னை நியமித்து இருக்கிறார். அதற்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலமைச்சர் கருணாநிதி, கட்சியினரிடம் எப்போதும் பதவியை பதவியாக நினைக்க கூடாது. பொறுப்பாக கருதி செயல்பட வேண்டும் என்று கூறுவார். அவர் சொல்லிக்கொடுத்த பாடத்தின்படி பொறுப்பாக கருதி பணியாற்றுவேன். சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக எப்படி நான் பணியாற்றினேனோ, அப்படியே துணை முதலமைச்சர் பொறுப்பிலும் பணியாற்றுவேன்.
28.7.2008 அன்று ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகனங்களை வழங்கும் விழாவில் முதலமைச்சர் என்னை வாழ்த்தி சொன்ன கருத்து இன்று நினைவுக்கு வருகிறது. உள்ளாட்சித்துறையில் எதிர்பாராத பல பணிகள் நடந்து இருக்கிறது.
முதலமைச்சர் பணியை விட்டு விட்டு உள்ளாட்சித்துறை அமைச்சராகி விடலாமா என்று பாராட்டினார். அதை தனிப்பட்ட பாராட்டாக கருதாமல் ஒட்டுமொத்த உள்ளாட்சிக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
முதலமைச்சர் உடல் நலிவுற்ற வேலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து இடைவிடாமல் உழைத்து வருகிறார். அதை மனதில் கொண்டு உழைப்பேன். எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறுபாடு காட்டாமல் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உறுதுணையாக இருப்பேன். முதலமைச்சருக்கும் உங்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவேன் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment