நிலாச்சோறு!!!

சீர்மையாய் செதுக்கப்பட்ட
மூக்குடைந்த சிற்பமாய்
மாடிவீட்டின் பின்புறகுடிசையில்
வாழும் ராணி நான்!

மாடிவீட்டார்களின் எச்சிலை
தேய்ப்பதும் வியர்வைகளை
துவைப்பதுமே என் தாயின் வேலை!

அவள் பெறும் துச்சபணத்திலும்
குடித்துவிட்டு அடிப்பதாகவே
விடியும் என் தந்தையின் காலை!

ஆயிரமாயிரம் துன்பங்கள் வந்தாலும்
அவர்களின் எச்சிலின் மிச்சங்களை
நிலாச்சோறாய் ஊட்டுவதை
என் தாய் நிறுத்தியதில்லை!

வழக்கத்திற்கு மாறான தாயின்
தாமதத்தின் பின்னால் நிலாச்சோறுக்காய்
ஓடி நிற்கையில்,

" இன்னைக்கு அமாவாசையடி"
தாயின் பதிலின் முடிவில்
மாடிவீட்டு உறவினர்களின்
மகிழ்வுந்து புறப்பட்டுபோனது!

-கவிஞர். ஜெ.தணிகை

No comments:

Post a Comment