சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு தமிழக அரசு மூடு விழா?

இதோ வருகிறது, அதோ வருகிறது என்று மூன்று ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த அறிவிப்பு, இந்த சட்டசபைக் கூட்டத் தொடரிலாவது வெளியாகுமா அல்லது வழக்கம் போல் மழுப்பப்படுமா என்ற கேள்வி, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது.


கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்தி, அனைத்து மாணவர்களுக்கும் வேறுபாடு இல்லாத தரமான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்த அறிவிப்பை, தி.மு.க., அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்திற்குக் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும், திட்டத்தை அமல்படுத்துவதில் ஏனோ தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. மூன்று ஆண்டுகளாக இந்தத் திட்டம் வெறும் அறிவிப்பு நிலையிலேயே இருக்கிறது; செயல்பாட்டிற்கு வந்தபாடில்லை. சட்டசபையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பதிலளித்துப் பேசும்போது, சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்ப்பர்; ஆனால், அதைப் பற்றி ஒற்றை வரி கூட இடம்பெறாது. அப்படி இடம்பெற்றாலும், அத்தோடு சரி. கடந்த ஆண்டு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தில் பக்கம் எண் 40ல், "சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் இக்கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது' என அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி ஒரு கல்வியாண்டு முடிந்து, அடுத்த கல்வியாண்டும் துவங்கிவிட்டது.


 காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதியை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுகிறது. மிகப் பொருத்தமாக அதே நாளில், பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இந்த நன்னாளிலாவது சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அறிவிப்பு வருமா அல்லது வழக்கம்போல் மழுப்பப்படுமா என்ற கேள்வி, பெற்றோரிடையே ஏற்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் இத்திட்டத்தை தமிழக அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment