லால்காரை விடுவிக்க சிறிதுகாலம் பிடிக்கும்- ப. சிதம்பரம்

மேற்குவங்க மாநிலம் லால்காரை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்க அனைவரும் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக சிறிது காலம் பிடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

மேற்குவங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை சில காலம் தொடரும் என்று சிதம்பரம் கூறினார்.

லால்கார் பகுதியை நோக்கி பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையுடன் முன்னேறி வருவதாகவும், அப்பகுதியில் பழங்குடியினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் படையினர் எச்சரிக்கை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை அறிவித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினரின் மெதுவான முன்னேற்றம் காரணமாக லால்கார் பகுதியை எப்போது அவர்கள் அடைவார்கள் என்பதை கூற முடியாது. இதுவரை திட்டமிட்டபடி பாதுகாப்புப் படையினர் நகர்ந்து வருவதாக அவர் கூறினார்.

எதிர்பாராத எந்த சம்பவங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய ப. சிதம்பரம், இந்த நடவடிக்கை வெற்றிபெறும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை சில ஊடகங்கள் போர் என்று குறிப்பிட்டிருப்பதைக் குறைகூறிய ப. சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட் என்ற பெயரில் அவர்கள் செயல்பட்டாலும், இந்தியர்கள் தான். எனவே இந்த மோதலை போர் என்று கூறாதீர்கள் என்றார்.

மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆயுதங்களைக் கையிலெடுத்துள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான செயல் இது என்றார் அவர்.

இதனிடையே மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லால்கார் நோக்கி மேற்கு வங்க காவல்துறையினரும், மத்தியப் படையினரும் 2ஆவது நாளாக முன்னேறிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment